திருவிழாக்கள் நடத்த தளர்வுகள் அளிக்க வேண்டும் : கிராமிய கலைஞர்கள், பந்தல் தொழிலாளர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்த தளர்வுகள் அளிக்க வேண்டும் என்று, கிராமியக் கலைஞர்கள், பந்தல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 200-க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள், 20-க்கும் மேற்பட்ட பந்தல் அமைப்பாளர்கள் திரண்டு வந்து, மனு அளித்தனர்.

கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் அளித்துள்ள மனுவில், “தென்காசி மாவட்டத்தில் கிராமியநாட்டுப்புற கலைஞர்கள் பெருமளவில் வசித்து வருகிறோம். கோயில்திருவிழாக்களில் இரவு 10 மணிக்குமேல் தான் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் முற்றிலும் தடைபட்டுவிட்டது.

கடந்த ஆண்டு இதேபோல் ஊரடங்கு உத்தரவால் கலைநிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் போனதால் கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே, எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில் கோயில் திருவிழாக்களில் இரவு 1 மணி வரையாவது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதேபோல், பந்தல் அமைப்பாளர்கள் சார்பில் அளித்துள்ள மனுவில், “ தமிழகம் முழுவதும் திருவிழா மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் தொழிலில் சுமார் 5 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஓரிருமாதங்களாக தொழில் மீண்டும்இயல்பு நிலைக்கு வந்தது. இந்நிலையில், திருவிழாக்கள் ,திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளவும், திருமண மண்டபங்கள், அரங்குகளில் 50 சதவீதம் பேர் பங்கேற்கும் வகையில் அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, கிருமி நாசினி பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை கடைபிடித்து மற்ற கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் பொதுநலச் சங்க தலைவர் பழனியாபிள்ளை தலைமையில் கிராமிய கலைஞர்கள் திரண்டு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்