ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 7 பேர் கைது :

By செய்திப்பிரிவு

வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நசீர்கான்(30). இவர், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அவர், ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு, சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி நசீர்கான் தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, நசீர்கானை வழிமறித்து,ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளி களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை பிடிக்க சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அதில் கிடைத்த தகவலின் பேரில், வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மஸ்தான்(22), பழ வியாபாரிகள் நூருல்லா(32), சான் பாஷா(31), முகமதுஅலி(32), பக்கீர் தர்கா பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி சதாம்உசேன்(28), வெல்டிங் தொழிலாளி முகமதுரபி (32), தனியார் நிறுவன ஊழியர் கவியரசு(28) ஆகிய 7 பேரை தனிப் படையினர் கைது செய்து நேற்று முன் தினம் இரவு சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தனிப்படை காவல் துறையினர் கூறும்போது, “ஆட்டோ சங்கத் தலைவர் பதவிக்கு மஸ்தான், நசீர்கான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூலிப் படையினர் உதவியுடன் மஸ்தானை கடந்தாண்டு நவம்பர் மாதம் தாக்கி, அவரது ஆட்டோவை பறித்து சென்றுள்ளார் நசீர்கான். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நசீர்கான் உள்ளிட்ட 3 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தன்னை தாக்கியதற்கு பழி தீர்க்கும் வகையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து நசீர்கானை, மஸ்தான் வெட்டிக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, புரிசை பகுதியில் பதுங்கி இருந்த மஸ்தான் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தலைமறைவாக உள்ள 3 பேர் தேடப்பட்டு வருகின்றோம்.கைது செய்யப்பட்ட மஸ்தான், நூருல்லா, கவியரசு மற்றும் சதாம் உசேன் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்