வேலூர் மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி வரை - 18 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் : 45 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க அழைப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இலவச கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், வணிகர் சங்கத்தினர், காய்கறி வியாபாரிகள், தங்கும் விடுதி பணியாளர்கள், உணவகங்களில் பணிபுரியம் ஊழியர்கள் என பொதுமக்களிடம் தொடர்பில் இருக்கும் அனைத்து தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் லாரி, பேருந்து, ஆட்டோ மற்றும் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் என சுமார் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கணேஷ் பெட்ரோல் பங்க், காட்பாடியில் உள்ள லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க், வேலூர் இந்திரா பெட்ரோல் பங்க், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க அலுவலகம், ஓட்டேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது, வட்டார போக்கு வரத்து அலுவலர் செந்தில்வேலன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, ராஜேஷ் கண்ணா, வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வங்கி ஊழியர்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வேலூர் எஸ்பிஐ வங்கிக்கிளையில் நேற்று தொடங்கியது.

இதனை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது, முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடஸ் சியஸ், மண்டல மேலாளர் சேது முருகதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்