கரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் உள்ள உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி கோயிலில் நடைபெறும் சித்திரை விஷு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
நடப்பாண்டு இத்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனால், பாபநாசம் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டு, உள் பிரகாரத்தில் சப்பர பவனி மட்டும் நடைபெற்று வருகிறது.
மேலும், நாளை (13-ம் தேதி) நடைபெற இருந்த தேரோட்டம், 14-ம் தேதி நடைபெற இருந்த தெப்பத் திருவிழா, மறு நாள் அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் சுவாமி, அம்பாள் கட்சி அளிக்கும் வைபவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
14-ம் தேதி சித்திரை விஷு திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் கோயிலுக்கு வருவது வழக்கம். கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் அன்றைய தினம் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு தினந்தோறும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago