ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான விழா கடந்த 6-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா ஆகியவற்றுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் கூறியதாவது:
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்களுக்கு புனித நீர், பால் ஊற்றுவது போன்ற நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில்களில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பூ, தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களுக்கு அனுமதி இல்லை. எப்போதும் கம்பம் எடுக்கும் நிகழ்வு மாலை 3 மணிக்கு நடைபெறும். ஆனால், இந்தாண்டு அதிகாலை 5.05 மணிக்கு நடைபெறும்.
கோயில் பூசாரிகள் மட்டும் இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று கோயில்களின் கம்பமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும். மஞ்சள் நீராட்டு விழாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்களும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago