ஈரோடு மாநகராட்சியில் 19 பேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு வஉசி பூங்கா, நேதாஜி காய்கறி மார்க்கெட் பகுதியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தோனி பிரிட்ஜில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட் ஆகியவற்றிலும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டுமென கடை உரிமையாளர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். மரப்பாலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆணையர் ஆய்வு மேற்கொண்டபோது கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒரு ஓட்டல் மற்றும் பேக்கரி கடையில் பின்பற்றாதது கண்டறியப்பட்டது.
இரு கடைகளுக்கும் ஆணையர் உத்தரவின்படி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஆணையர் ஆய்வின்போது அந்த வழியே வந்த ஷேர் ஆட்டோவில் 19 பயணிகள் இருந்தனர்.
விதிமுறைகளை மீறி அதிகளவு பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோவின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆட்டோ பறிமுதல் செய்து டவுன் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, நகர் நல அலுவலர் முரளி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago