நெல்லையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : இளநீர், தர்பூசணி, நுங்கு விற்பனை மும்முரம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், பதநீர் வாங்கி பருகுவதுடன், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி பிஞ்சு, போன்றவற்றை வாங்கி உண்ண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

நடப்பாண்டு கோடை காலத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்து மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்கிறார்கள்.

அவ்வப்போது போதிய குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிறிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்திநூல் ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைந்திருப்பின், பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

மின்விசிறியை பயன்படுத்தியும், குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, எலுமிச்சை சாறு, மோர், நீர்த்த தண்ணீர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருகலாம்.

கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழவான இடத்தில் கட்டி வைத்து அவற்றுக்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனங்களை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் சாக்கு பைகளை நனைத்து விலங்கினங்கள் மீது போர்த்த வேண்டும்.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், மாமிசக் கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்

வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் கதவுகள் பூட்டப்பட்ட வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம் என்றெல்லாம் பல்வேறு ஆலோசனைகளை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

திருநெல்வேலியில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க தர்பூசணி பழங்கள், இளநீர், வெள்ளரி பிஞ்சு, நுங்கு, பதநீர் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் கோடைக்கு முன்னரே தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்து குவிக்கப்படும்.

திண்டுக்கல், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து அதிகப்படியாக தர்பூசணி லாரிகளில் கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். அந்த வகையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பல இடங்களில் தர்பூசணி பழங்கள் தற்போது விற்பனைக்கு குவிக்கப்பட்டிருக்கின்றன. தர்பூசணி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சுரண்டை, திருத்து போன்ற பனைமரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து நுங்கு மற்றும் பதநீர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நுங்கு ரூ.8-க்கும், பதநீர் ஒரு சிறிய செம்பு ரூ.15-க்கும் விற்பனையாகிறது. திருநெல்வேலி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து இளநீர் பெருமளவுக்கு விற்பனைக்கு குவிக்கப்பட்டு ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாகின்றன. சாத்தூர், கருங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ரூ.20-க்கு 5 வெள்ளரி பிஞ்சுகள் வீதம் விற்பனை செய்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்