காட்பாடி வட்டம் லத்தேரி அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் யானைக்கூட்டம் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப் பகுதியில் ஆந்திர மாநில அரசின் பராமரிப்பில் யானைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள யானைக் கூட்டம் அவ்வப்போது தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு சைனகுண்டா பகுதியில் இருந்து 11 யானைகள் அடங்கிய கூட்டம் பரதராமி, பனமடங்கி, பள்ளத்தூர் மற்றும் கிறிஸ்டியான்பேட்டை அருகே வரையுள்ள கிராமங்களில் நடமாடின. சுமார் 3 மாதங்கள் போராட் டத்துக்குப் பிறகு ஆந்திர மாநில வனப் பகுதிக்குள் யானைக்கூட்டம் விரட்டி யடிக்கப்பட்டது. மீண்டும் யானைக்கூட்டம் வராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
யானைக் கூட்டம் வந்து ஓராண்டு கடந்த நிலையில் ஆந்திர மாநில எல்லை கிராமங்களில் சுற்றித்திரிந்த 9 யானைகள் அடங்கிய கூட்டம் நேற்று முன்தினம் இரவு லத்தேரி அருகேயுள்ள கிராமங்களில் திடீரென புகுந்தன. இந்த தகவலறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு யானைக் கூட்டத்தை பட்டாசு வெடித்து ஆந்திர மாநிலம் மூலவலசை பண்டபல்லி பகுதிக்குள் விரட்டினர். தமிழக எல்லையில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் முகாமிட்டுள்ள இந்த யானைக் கூட்டம் எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்பதால் கிராம மக்களும் வனத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். எனவே, அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைக் கூட்டத்தை விரட்ட வேண்டும் என தமிழக பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago