வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 25-ம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளதாக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கரோனா தடுப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மை செய லாளருமான ராஜேஷ் லக்கானி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன் னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) யாஸ்மின், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மணிவண்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதி காரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி பேசும்போது, ‘‘வேலூர் மாவட் டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கரோனா தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்கள் அரசின் கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண் டும். இதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.
இவர்கள், வரும் 25-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள். மாவட்டத்தில் 46 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, அரசு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியுடன் 7 வட்டாரங்களிலும் 3 நடமாடும் மருத்துவக் குழுவினர் கரோனா தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, சத்து வாச்சாரி கெங்கையம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற கரோனா காய்ச்சல் பரிசோதனை முகாமை ஆய்வு செய்த அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தையும் ஆய்வு செய்தார்.
பின்னர், அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் பொதுமக்களிடம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என விசாரித்ததுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago