தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி கோபி அருகே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு :

By செய்திப்பிரிவு

கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளாங்கோயில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் ராஜேந்திரன் என்ற சிலம்பக்கலைஞர், கடந்த 15 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் சிலம்பம் கற்றவர்கள் மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 9 வீரர், வீராங்கனைகள் கோவாவில் நடக்கும் தேசிய அளவிலான சிலம்புப் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர். இவர்கள் போட்டிகளில் பங்கேற்க சென்று வர ஆகும் செலவுத்தொகையை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து திரட்டியுள்ளனர். நடிகர் பாக்கியராஜின் சொந்த ஊர் வெள்ளாங்கோயில் என்பதால், அவரது கவனத்துக்கு கொண்டு சென்று உதவி பெற்றுள்ளனர்.

பலரின் நிதி உதவியைப் பெற்று கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று நேற்று முன்தினம் கோபி திரும்பினர். அவர்களுக்கு கிராம மக்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுதொடர்பாக சிலம்ப பயிற்சியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்ற மாணவ, மாணவியர் அனைவரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள். அவர்கள் கோவா சென்று வர பயண செலவு, தங்கும் செலவு உள்ளிட்டவற்றை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கொடுத்து உதவியுள்ளனர். கோவாவில் நடந்த 7-வது தேசிய ‘பெடரேசன் கப் யூத் ரூரல் கேம்ஸ் 2021’-ல் பங்கேற்று இவர்கள் சிலம்பம் விளையாடினர். இதில், தனித்திறமைப் போட்டிகளில் பிரசாந்த், மனோ, மகேஸ்வரன், இளஞ்செழியன், ஓம் பூர்ணிசா, ஜனனி ஆகியோர் தங்கப்பதக்கமும் சுரேந்திரன், மைதிலிதேவி ஆகிய இருவரும் வெள்ளிப்பதக்கமும் நிதி வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை புரிந்துள்ளனர். தமிழக அரசு சிலம்ப வீரர்களுக்கு விளையாட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு சார்பில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் இட இதுக்கீடு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்