பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்துவது குறித்துஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவிட்-19 கண்காணிப்பு மையத்தின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற வெளி மாநிலங்களில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்.
கரோனா தொற்று பரவலை தடுத்திடும் பொருட்டு அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்திட வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகிய துறைகளை ஒன்றிணைத்து தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பணிக்குச் செல்வோர் பணிபுரியும் இடங்களில் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களின் மீது அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago