கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் செயல்பட தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில், வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பேசியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இனி வாரம் தோறும், ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மார்க்கெட்டை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளில், இறைச்சிகளை பாக்கெட் செய்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தேநீர் கடைகளில் ஒரு முறை உபயோகிக்கும் பேப்பர் கப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கரோனா தடுப்பூசி போட 50 நபர்களுக்கு மேல் பதிவு செய்தால், அவர்களின் இடத்திற்கே வந்து, மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்படும். கரோனா விதிகளை மீறினால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை கடைக்கு சீல் வைக்கப்படும்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயாக இருந்த அபராதம் 200 ரூபாயாகவும், எச்சில் துப்பினால் ரூ.500, சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு ரூ.500, வணிக நிறுவனங்கள், வாகனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்களின் செல்போன் எண், பெயர் பதிவு செய்ய வேண்டும். ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் கரோனா தொற்றாளர்கள் இருந்தால், அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அடைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago