திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
கரோனா இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து, அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கரோனா வைரஸ் அறிகுறி இல்லாமலும் வேகமாக பரவக் கூடியது, எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதிகமாக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் இதை பின்பற்ற வேண்டும். தங்களது இல்லங்களில் உள்ள குழந்தைகளையும், வயதானவர்களையும் வெளியில் அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
3 பிசிஆர் இயந்திரங்களின் மூலம், தினமும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு,நோய் தொற்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் உரிய நபர்களுக்கு தெரிவிக்கப்படும். கரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கடைகளுக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ சென்று, வீடு திரும்பியவுடன் கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவிய, பின்னர்தான் வீட்டில் தங்களது அன்றாடப் பணிகளை தொடங்க வேண்டும். வெளியில் செல்ல நேரிடும் போது ஒருவருக்கொருவர் 3 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கரோனா 2-வது அலை குறித்து அச்சப்படத் தேவையில்லை.
தமிழக அரசு விதித்துள்ள, கட்டுப் பாடுகளை கடைபிடித்து கரோனா இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், அரசு மருத்துவமணை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் வரதராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்பை, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,500 ஆக உள்ளது.தென்காசி
தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காகவும், தொற்று ஏற்பட்டுள்ள நபர்களை கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்கவும், கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் சமீரன் தலைமையில் முக்கிய அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆட்சியர் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று கண்டறியப்பட்ட வர்களின் வீடுகளை தினமும் கண் காணித்து அறிக்கை அளிக்கவும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் நபர்களால் மேலும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்புகள் அமைத்து கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள், கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் உணவு அருந்த அனுமதிக்கப்படுவர்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் மட்டுமே பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.
விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளி கடைபிடிப் பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கும் பட்சத்தில் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
முகக்கவசம் அணிவது குறித்தும் அபராத விபரங்கள் குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த நகராட்சிகள், பேரூராட் சிகள் மற்றும் ஊராட்சிகள் மூலம் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கரானா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago