கரோனா முன்னெச்சரிக்கை எனக்கூறி சிறு வணிகர்கள் வியா பாரம் செய்ய தடை விதித்திருப்பதை ஏற்க முடியாது எனவும், இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் மே 5-ம் தேதி 38-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த வணிகர் சங்க மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகளின் ஆலோ சனைக்கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டலத் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந் தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கரோனா காலத்தில் வியாபாரிகள் மீது விதிக்கப்படும் அபராத முறையை கைவிட வேண்டும். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வரவில்லை என்றாலும், வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது ஏற்க முடியாது. கரோனா குறித்த விழிப்புணர்வுகளை வியாபாரிகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது, கரோனா 2-வது அலை எனக்கூறி, தமிழகத்தில் சிறு வியாபாரிகள் கடை நடத்த ஏப்ரல் 10-ம் தேதி (இன்று) முதல் தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது. 50 சதவீதம் சிறு வியாபாரிகளை சுழற்சி முறையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அரசு அறிவித்த இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இல்லை யென்றால், மாநிலம் தழுவிய போராட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடத்தப்படும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ளது.
மே2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு யார் ஆட்சி அமைத்தாலும் வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடிதம் வழங்க உள்ளோம்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, சென்னை யில் நடைபெறும் மாநாட்டில் வேலூர், சேலம் மண்டலத்தில் இருந்து அனைத்து வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும். கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா விதி மீறல் எனக்கூறி கடைகளுக்கு ‘சீல்' வைப்பது, அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது உள்ளிட்ட சட்ட அத்து மீறல்களை முழுமையாக அரசு தளர்த்த வேண்டும்.
திருப்பத்தூரில் மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும். காவலூர், ஜவ்வாதுமலைப்பகுதியில் மூலிகை பண்ணை அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன.
இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள் கேசவன் (கிருஷ்ண கிரி), பெரியசாமி (சேலம்), ஜெயக் குமார் (நாமக்கல்), சரவணன் (ராணிப்பேட்டை), மாதேஸ்வரன் (திருப்பத்தூர்), சேலம் மண்டலத் தலைவர் வைத்தியலிங்கம், வேலூர் மாவட்டத் தலைவர் ஞானவேலு, மாநில துணைத் தலைவர்கள் கிருஷ்ணன், தரன், பாஸ்கரன், ராஜேந்திரன், பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago