கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழாவில், பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு நகரின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, இக்கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மூன்று கோயில்களிலும், கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காரைவாய்க்கால், சின்ன மாரியம்மன் கோயில் வளாகத்தில், நேற்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிலையில், இந்த ஆண்டு பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மூன்று வகையறா கோயில்களைச் சேர்ந்த 9 பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. சின்ன மாரியம்மன் கோயில் வளாகம் முன்பு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பொன்வீதி, நகர காவல்நிலையம், மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, கச்சேரி வீதி வழியாக திரும்பவும் சின்ன மாரியம்மன் கோயிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து
பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (9-ம் தேதி) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 12-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ம் தேதி மறுபூஜை உடன் திருவிழா நிறைவடைகிறது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சின்ன மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்பு, கிருமிநாசினியைப் பயன்படுத்திய பின்பே அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago