ஆத்தூரில் தேர்தலின்போது மோதல் - அதிமுக கிளைச் செயலாளர் காயம்; ஊராட்சித் தலைவர் உட்பட 12 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் தேர்தல் பணியின்போது, திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக கிளைச் செயலாளர் காயமடைந்தார். இதுதொடர்பாக, திமுகவினர் 8 பேர், அதிமுகவினர் 4 பேர் என 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் ஊராட்சி காளிபாளையம் விநாயகர் கோயில் அருகே செல்லரப்பாளையம் அதிமுக கிளைச் செயலாளர் முருகமணி(57) தலைமையில் அதிமுகவினர் கடந்த 6-ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திமுகவைச் சேர்ந்த ஆத்தூர் ஊராட்சித் தலைவர் செல்லை சிவசாமி(43), முருகமணியின் சகோதரரும், திமுக கிளைச் செயலாளருமான தங்கவேல்(55) உள்ளிட்ட திமுகவினர் அங்கு வந்துள்ளனர்.

அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த முருகமணி சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் மாரப்பன் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் புகார் அளித்தார். மேலும், இதுகுறித்து வாங்கல் போலீஸில் முருகமணி அளித்த புகாரின்பேரில், ஊராட்சித் தலைவர் செல்லை சிவசாமி, சுப்புராயன்(65), சுப்ரமணி(60), தமிழ்செல்வன்(30), பொன்னுசாமி (35), திமுக கிளைச் செயலாளர் தங்கவேல்(55), சக்திவேல்(41), முத்துசாமி(65) ஆகிய 8 பேர் மீது 4 பிரிவுகளில் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாங்கல் போலீஸில் செல்லரப்பாளையம் திமுக கிளைச் செயலாளர் தங்கவேல் அளித்த புகாரின்பேரில், அதிமுக கிளைச் செயலாளர் முருகமணி, சீனிவாசன்(37), பொன்னுசாமி(47), பாலசுப்ரமணி (30) ஆகியோர் மீது 2 பிரிவுகளில் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்