அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் பூங்குன்றன்(55). இவரது வீட்டின் அருகே வசிக்கும் நாராயணசாமி(50) தனது வீட்டில் கடந்த 6-ம்தேதி இரவு அதிக சப்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். இது அருகில் வசிப்பவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் பூங்குன்றன், நாராயணசாமியிடம் பாட்டு சப்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாராயணசாமி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து, பூங்குன்றனை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். மேலும் அவரது கார் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, வீட்டின் மீது கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தா.பழூர் காவல் நிலையத்தில் பூங்குன்றன் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கல்வீச்சில் ஈடுபட்ட சிலரை பூங்குன்றனின் உறவினர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த பூங்குன்றன் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் தா.பழூர் காவல் நிலையம் முன்பு நேற்று முன்தினம் இரவு அமர்ந்து சம்பந்தபட்டவர்களை கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, நாராயணசாமி(50), பாக்யராஜ் (33), கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(26), தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபு(24) ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago