ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு : மே மாதம் நடத்த கல்வித் துறை திட்டம்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம்நடத்த, கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,498 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். வழக்கமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாத இறுதியில் நடத்தப்படும். ஆனால், கரோனா பரவலால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கலந்தாய்வை நடத்துவதிலும் சிக்கல் நிலவியது. இதற்கிடையே 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து ஆசிரியர்களுக்கான பதவிஉயர்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால், பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த எவ்வித தகவலும் வெளியாகிவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த விசாரணையில், பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் சேர்த்து நடத்த பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வை நடத்த முடிவு செய்துள்ளோம். கரோனா பரவல் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேதிகள் முடிவு செய்யப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்