சட்டப்பேரவைத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 73.98 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 77.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் முடிந்தது. இதில், அணைக்கட்டு தொகுதியில் உள்ள பீஞ்சமந்தை, பலாம்பட்டு, தொங்குமலை, குருமலை உள்ளிட்ட கிராமங் களில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்த நிலையில், மாவட்டத்தில் சராசரி 73.98 சதவீதமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
காட்பாடி தொகுதியில் 74 சதவீதமும், வேலூரில் 70.25 சதவீதமும், அணைக்கட்டில் 77.05 சதவீதமும், கே.வி.குப்பத்தில் 76.50 சதவீதமும், குடியாத்தம் தொகுதியில் 72.56 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தந்த தொகுதிக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் கருவிகள் அனைத்தும் நேற்று காலை 10 மணியளவில் வேட்பாளர்கள், முகவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட அறையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளின் சராசரி வாக்குப்பதிவு 77.96 சதவீதமாக உள்ளது. இதில், அரக்கோணம் தொகுதியில் 74.89 சதவீதமும், சோளிங்கர் தொகுதியில் 80.09 சதவீதமும், ராணிப்பேட்டை தொகுதியில் 77.24 சதவீதமும், ஆற்காடு தொகுதியில் 79.62 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சார் ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் பார்வையிட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago