வாக்குச்சாவடி முன்பாக அமர்ந்த பெருந்துறை சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை தொகுதியில் அதிமுக, கொமதேக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால் இத்தொகுதியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல வாக்குச்சாவடிகளில் இந்த இரண்டு இயந்திரங்களும் வரிசைப்படி வைக்காமல், மாற்றி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளின் இந்த தவறால், வேட்பாளர்களின் வரிசை மாறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை தொகுதி சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம், பொன்முடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால், தன்னுடைய குறையை சரி செய்யும் வரை வாக்குப்பதிவு நடத்தக்கூடாது என்று கூறி வாக்குச்சாவடி முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்க முடியாமல் வெளியே காத்திருந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களும் முறைப்படி மாற்றி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago