ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளைச் சேர்ந்த இரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
பரமக்குடி (தனி) தொகுதியைச் சேர்ந்த கமுதக்குடி கிராமத்தில் மதுரை-ராமேசுவரம் ரயில்பாதையில் இருந்த ரயில்வே கேட்டை ஓராண்டுக்கு முன் ரயில்வே நிர்வாகம் அகற்றியது. அதனால் கமுதக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 6 கிராம மக்கள் சிரமம் அடைகின்றனர். இது குறித்து அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும், பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தியும் தீர்வு கிடைக்காததால் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்தனர்.
கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இக்கிராம வாக்காளர்கள் 2,173 பேர் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.
தகவலறிந்த ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுரங்கப்பாதை அமைக்கும் வரை ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். உதவி இயக்குநர் ஏற்க மறுத்ததால் தேர்தலைப் புறக்கணித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் உடன்படாமல் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு வந்த 6 பேர், பரமக்குடி தேமுதிக வேட்பாளர் செல்வி உள்ளிட்ட 29 பேர் மட்டும் வாக்களித்தனர்.
முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த மண்டலமாணிக்கம் ஊாட்சி கோடாங்கிப்பட்டி கிராமத்தினர், சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தராததால் 232 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
கமுதி வட்டாட்சியர் மாதவன் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் ஏற்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்தனர். பின்னர் ம.பச்சேரியைச் சேர்ந்த 5 பேர் மட்டும் வாக்களித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago