ஈரோட்டில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் 9-வது முறையாக போட்டியிடும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தனது சொந்த கிராமமான குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கோபி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து திட்டங்ளும் நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக கருதுகிறோம்’ என்றார்.
பவானி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், காட்டுவலசு அருகில் உள்ள வேலம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘முதல்வர் பழனிசாமி, அனைவராலும் பாராட்டப்பட்டவர். எதிர்கட்சியினர் கூட நல்லாட்சி செய்பவர் என அவரைப் பாராட்டியுள்ளனர். அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தனர். தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘திமுக – காங்கிரஸ் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுகவுக்கு தோல்விபயம் வந்து விட்டதால், 5 தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என உளறுகின்றனர். கொஞ்சம் விட்டால், 234 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள்’ என்றார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் சம்பத் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அவரது மனைவி மற்றும் மகள்களுடன் வாக்களித்தார். மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மாணிக்கம்பாளையத்திலும், பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களித்தனர்.
ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் கலைமகள் பள்ளியிலும், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் எம்.யுவராஜா, செங்கோடம்பள்ளம் அரசு பள்ளியிலும், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி ஈரோடு சிஎஸ்ஐ மகளிர் பள்ளியிலும், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் சூரம்பட்டிவலசு அம்பேத்கர் விடுதியிலும் வாக்களித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago