‘பீப்’ ஒலி வராமல் வாக்குப்பதிவானதால் - அந்தியூர் அருகே 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது, ‘பீப்’ ஒலி வராமல் வாக்குகள் பதிவானது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் ஆட்சேபித்ததால் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐந்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் ஒரு வாக்குச்சாவடியில், ஒரு வாக்காளர் வாக்களித்த போது, ‘பீப்’ சத்தம் கேட்கவில்லை. இதனைத் தொடர்ந்து, மீண்டும் இருமுறை அவருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அப்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து ‘பீப்’ ஒலி கேட்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவானதற்கு அத்தாட்சியாக ‘பீப்’ ஒலி கேட்காத நிலையில், அவருக்காக கட்டுப்பாட்டு இயந்திரத்தில் இருந்து விடுவித்த மூன்று வாக்குகளும் பதிவானதாக கணக்கில் அதிகரித்து இருந்தது.

இதையடுத்து, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், ‘பீப்’ ஒலி வராத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்தது. இந்த பிரச்சினையால் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பேருந்து சிறைபிடிப்பு

இதேபோல், அந்தியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் வாக்களிக்க வந்த 27 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டனர். தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று கூறி அவர்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து அந்தியூரில் இருந்து சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்தனர்.

அங்கு வந்த போலீஸார், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என சரிபார்க்காமல் விட்டுவிட்டு, இப்போது அரசுப் பேருந்தை சிறை பிடிப்பது தவறு என எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்