தனியார் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தால் - கத்தாரிகுப்பம் கிராமத்தில் 20 வாக்குகள் மட்டுமே பதிவு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை அருகே கத்தாரி குப்பம் கிராமத்தில் டயர் எரிக்கும் தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி தேர்தலை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 20 வாக்குகள் மட்டுமே பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்துக்கு உட்பட்ட கத்தாரிகுப்பம் கிராமத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி உள்ளது. காட்பாடி தொகுதியில் அமைந்துள்ள இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 990 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள பழைய டயர்களை எரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் ஏற்கெனவே தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி வரும் நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின்பேரில் தொழிற்சாலைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. ஆனால், தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது குறித்த எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறி வருகின்றனர். மேலும், பிரச்சினையை தீர்க்காவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறினர்.

இந்நிலையில், கத்தாரிக்குப்பம் பகுதிக்கான வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க முன்வர வில்லை.

இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த பம்ப் ஆபரேட்டர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அரசுப் பணியாளர்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி இந்த வாக்குச்சாவடியில் 20 வாக்குகள் மட்டுமே பதிவு செய்தனர். இதனால், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு ஏமாற்றம் அடைந்தது.

இதையடுத்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு மற்றும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த போராட்டக் குழுவினர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என பிடிவாதமாக இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்