போதைமலைக்கு தலைச்சுமையாக எடுத்துச் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் : சாலை வசதி இல்லாததால் ஒவ்வொரு தேர்தலிலும் அவலம்

By செய்திப்பிரிவு

போதைமலைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை தேர்தல் பிரிவு அலுவலர்கள் தலைச்சுமையாக கொண்டு சென்றனர். சாலை வசதியில்லாததால் பல ஆண்டுகளாக இந்த அவல நிலை நீடித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் போதைமலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு உட்பட்ட பகுதியில் கீழூர் ஊராட்சியில் கீழூர், கெடமலை ஆகிய இரு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இரண்டிலும் சேர்த்து மொத்தம் 902 வாக்குகள் உள்ளன. இந்த மலைக்கு செல்ல போதிய சாலை வசதியில்லை.

இதனால், ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இவ்விரு வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை தலைச்சுமையாக அல்லது கழுதை மேல் வைத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம். இதன்படி இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நேற்று காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை மலையின் அடிவாரமான வடுகத்தில் இருந்து தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்டன.

தேர்தல் மண்டல அலுவலர் தலைமையில் 24 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். மலையடிவாரத்தில் இருந்து கீழூருக்கு சுமார் 8 கி.மீ., தூரம் மலையில் நடந்து செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து கெடமலைக்கு மேலும் 8 கி.மீ, தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.ராசிபுரம் அருகே வடுகம் அடிவாரத்தில் இருந்து போதைமலைக்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்