ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம மக்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட மலைப்பகுதியையொட்டி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட பர்கூரைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட கத்திரி மலையில் 133 வாக்காளர்கள் உள்ளனர். செங்குத்தான மலைப்பகுதியில் 12 கி.மீ தூரத்தை கடந்தால் கத்திரி மலையை அடைய முடியும். கத்திரி மலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கழுதைகள் மூலம் நேற்று காலை கொண்டு செல்லப்பட்டன.
அதேபோல், வேலாம் பட்டியை அடுத்த குட்டையூருக்கு செல்ல பாலாற்றை கடந்து செல்ல வேண்டும். பாலாற்றில் நீர் ஓடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தலைச்சுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.
கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட விளாங் கோம்பை மலைக்கிராம மக்கள், 10 கி.மீ தூரம் அடர்ந்த வனப்பகுதியைக் கடந்து குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள வினோபா நகருக்கு வாக்களிக்க வரவேண்டியுள்ளது.
இக்கிராம மக்கள் வாக்களிக்க வாகன வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதேபோல், கடம்பூர், தாளவாடி பகுதிகளில் பேருந்து சேவை இல்லாத பகுதிகளில், தேர்தல் ஆணை யம் வாகன வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago