திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,885 வாக்குச்சாவடிகளில் 12 மணி நேரம் இடைவிடாமல் இன்று (6-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், கடந்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 10,17,322 ஆண் வாக்காளர்களும், 10,60,026 பெண் வாக்காளர்களும் மற்றும் 92 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 20,77,440 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 27,198 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
இதில், கரோனா தொற்று பரவலை தடுக்க புதிதாக 513 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 376 வாக்குச்சாவடி கள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. சுமார் 50 சதவீத வாக்குச்சாவடி கள் கேமரா மூலம் கண்காணிக்கப் படவுள்ளன.
மாதிரி வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு இன்று (6-ம் தேதி) நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. 12 மணி நேரம் இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும். முன்னதாக, 6 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்.ஒவ்வொரு வாக்குச் சாவடி யிலும் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட் டோர் பணியில் ஈடுபடவுள்ளனர். அதன் படி, மாவட்டம் முழுவதும் 13,880 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில். வாக்குச்சாவடியில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடத்துக்கான ஆணை, தொகுதி வாரியாக நேற்று காலை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்டவர்கள், தங்களது பணியிடம் அமைந்துள்ள வாக்குச்சாவடியை சென்றடைந்தனர். பின்னர் அவர்கள், வாக்குச்சாவடியை தயார் நிலையில் வைத்தனர்.
மின்னணு இயந்திரங்கள் பயணம்
வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என காண்பிக்கும் விவிபாட் இயந்திரம், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் மருத்துவ பாதுகாப்பு பொருட்கள், தேவையான இடங்களுக்கு சக்கர நாற்காலிகள், அழியா மை உள்ளிட்ட உபகரணங்கள் ஆகியவை கொண்டு செல்லும் பணி நேற்று நடைபெற்றது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், அந்தந்த வட்டாட் சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. திருவண்ணா மலை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
1,400 சக்கர நாற்காலிகள்
8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27,198 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 3,160 பார்வை யற்றவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் பிரெய்லி முறையில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும். சக்கர நாற்காலி பயன் படுத்தும் நிலையில் 15,354 பேர் உள்ளதால், அவர்களது நலன் கருதி வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 1,400 சக்கர நாற்காலிகள், வாக்குச்சாவடி மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27,198 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 47,802 பேர் என மொத்தம் 75 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் 8,531 பேர், தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவங்களை பெற்றுள்ளனர். அவர்களில் பலரிடம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தபால் வாக்குகளை பெற்றனர்.
11 வகை அடையாள அட்டை
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு பணியாளர்கள் அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.
சுகாதாரத் துறையினர்
கரோனா தொற்று பரவல் எதிரொலியாக, தமிழக தேர்தல் பணியில் முதன் முறையாக சுகாதாரத் துறையினர் ஈடுபடுகின்றனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடவுள்ளனர். உடல் வெப்ப நிலை பரிசோதனை, வாக்காளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்குவது, வாக்களிக்க செல்லும் போது கையுறை வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும், மருத்துவ பாதுகாப்பு பொருட்களின் கழிவுகளை, மஞ்சள் வண்ண குறியீட்டு பையில் சேகரித்து அப்புறப்படுத்தவுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 4,500 பேர்
தி.மலை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் உள்ளூர் காவல்துறையினர், துணை ராணுவத்தினர், ஊர்க் காவல் படையினர், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், சிறப்பு காவல் படையினர் என 4,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பதற்றமான வாக்குச்சாவடியில் துணை ராணு வத்தினர் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago