கே.வி.குப்பம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்த பறக்கும் படை குழு வினர் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பெண் தலைமை காவலர் உயிரிழந்தார்.
கே.வி.குப்பம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் காட்பாடி-குடியாத்தம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த குழுவில் வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் தலைமை காவலர் மாலதி (45) மற்றும் வீடியோகிராபர் பிரகாசம் (53) இருந்தனர். இவர்கள், சென்ற காரை செல்வராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார்.
இவர்கள் சென்ற கார் பழைய கிருஷ்ணாபுரம் (பி.கே.புரம்) கூட்டுச் சாலை அருகே சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று சென்றது.
இதைப்பார்த்த ஓட்டுநர் செல்வராஜ், திடீரென பிரேக்கை அழுத்தியதுடன் வலதுபக்கம் காரை திருப்பியுள்ளார்.
அப்போது, எதிர் திசையில் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற லாரியின் முன்பக்கத்தில் கார் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இதையடுத்து, லாரியில் இருந்தவர்கள் மற்றும் அவ் வழியாகச் சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார்த்திகேயன், பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பெண் காவலர் மாலதி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்தவர் களை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், துணை காவல் கண்காணிப் பாளர் தரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விபத்தில் உயிரிழந்த பெண் தலைமை காவலருக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரரான செந்தில்வேலன் என்ற கணவரும், நிரஞ்சனா என்ற மகளும், தருண் குமார் என்ற மகனும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago