ஈரோடு மாவட்டத்தில் - பதற்ற வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி : இன்று பணி ஆணை வழங்கல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான, வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 126 மலைப்பகுதி வாக்குச்சாவடிகள் உட்பட 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலர்கள் என 13 ஆயிரத்து 160 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 335 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி இணைய தளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு இன்று (5-ம் தேதி) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்கான பணி ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்