புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த வி.கோட்டையூரைச் சேர்ந்தவர் மங்கலராமன். திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ரகுபதியின் ஆதரவாளரான மங்கலராமன் வீட்டில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் நேற்று மங்கலராமன் வீட்டில் சோதனை செய்தனர். இதில் சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல, ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரையப்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் துரை உட்பட சிலரது வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துரை மற்றும் அவரது உறவினர் உட்பட 7 பேரின் வீடுகளில் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமானுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக, அதிமுகவின் வட்ட அவைத் தலைவர் பழனி, பாலன் நகர் வட்டச் செயலாளர் சதாசிவம் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.50,500 ரொக்கம் மற்றும் வாக்காளர் பட்டியலையும் பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் தொடர்ந்து வருவதால், சோதனையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து அவர், விராலிமலை தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனையை ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago