கொடிவேரி பாசனத்துக்கு ஏப்ரல் இறுதியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
கொடிவேரி அணை பாசனத் துக்கு உட்பட்ட தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய் மற்றும் கொடிவேரி அணை ஆகியவற்றை விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனமாக்குதல் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.147 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக, நான்கு மாதங்கள் நீர் நிறுத்தம் செய்து தருமாறு பொதுப்பணித்துறையினர், பாசன விவசாயிகளைக் கேட்டிருந்தனர். அதனை ஏற்று, கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீர் நிறுத்தம் செய்ய பாசனசபை ஒப்புதல் அளித்தது.
மேலும், சித்திரை முதல் வாரத்தில் ஏப்ரல் 20-ம் தேதி வாக்கில் பாசனத்துக்கு நீர் திறக்கவும், முடிவடையாத வேலைகளை அடுத்த போக இடைவெளியில் ஒப்பந்ததாரர் செய்து கொள்ளவும் ஒத்துழைப்பதாக கொடிவேரி பாசனத்துக்கு உட்பட்ட கிளை சங்கங்கள் பொதுப் பணித்துறைக்கு உறுதியளிப்பு செய்துள்ளன.
இந்நிலையில், பாசன வயல் பகுதிகளில், கடந்த நான்கு மாதமாக வெகுவாக நிலத்தடி நீர் குறைந்து, வறட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பொதுப்பணித்துறையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அணையில் 93 அடிக்கு மேல் நீர் இருக்கின்ற சூழலில், பாசனத்துக்கு நீர் திறப்பு அவசியமாகிறது.
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு, இந்த பணிகளை முடிக்க அரசு இரண்டு ஆண்டு காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இருப்பினும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மீதம் உள்ள காலத்தில் மேற்படி தொடங்கிய பணிகளை துரிதமாவும், தரத்துடனும் நேர்த்தியாகவும் செய்யப்படவேண்டும்.
மேலும், எங்களது கோரிக்கையை ஏற்று ஏப்ரல் இறுதியில் இருந்து, கொடிவேரி பாசன இரண்டாம் போகத்துக்கு நீர் திறக்க ஆணை பெற ஆவண செய்யப்படும் என பொதுப்பணித்துறை உறுதியளித்துள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago