கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,937 தபால் வாக்குகள் பதிவு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி வரை நடைபெற்ற தபால் வாக்குப் பதிவில் மொத்தம் 2,937 வாக்குகள் பதிவா கியிருப்பதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவலர்கள், தேர்தல் பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள், இந்திய ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 8,518 நபர்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 2,646 நபர்கள் என மொத்தம் 11,164 நபர்கள் தேர்தல் பணியில் உள்ளனர்.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்டோரில் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து 5,198 நபர்கள் படிவம் பெற்றுள்ளனர். வெளி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டோரில் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து 2,048 நபர்கள் படிவம் பெற்றுள்ளனர்.

இதே போல் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17,760 நபர்கள் உள்ளனர். இதில் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து 1,376 நபர்கள் படிவம் பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 10,862 நபர்கள் உள்ளனர். இதில் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து 652 நபர்கள் படிவம் பெற்றுள்ளனர். 11 பத்திரிக்கையாளர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் பெற்றுள்ளனர். இந்திய ராணுவப்பணியில் 296 நபர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 30-ம் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் 1,074 நபர்களும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,251 நபர்களும், 606 மாற்றுத்திறனாளிகளும், 6 பத்திரிக்கையாளர்களும் என மொத்தம் 2,937 நபர்கள் தபால் வாக்கினை பதிவு செய்திருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய 5,198 நபர்கள் படிவம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE