குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இருப்பினும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்ததால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். கோடை மழை காரணமாக குற்றாலம் அருவிகளிலும் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது. அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த சில நாட்களாக வெயில் மீண்டும் அதிகரித்துள்ளதால் அருவிகளில் நீர் வரத்து வெகுவாகக் குறைந்தது. பாறையையொட்டி சிறிதளவு நீர் வழிந்து வந்தது. இதனால், அருவிகளில் ஆனந்தமாக குளிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். இந்த காலத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் குளுகுளு தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்யும். குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே மேற்குத்தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கும். அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. வெயில் வாட்டி வதைத்தாலும் காற்று வீசத் தொடங்கியுள்ளதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago