மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் - டாஸ்மாக் கடைகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனை :

By செய்திப்பிரிவு

வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வகையில், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், மொடக்குறிச்சியை அடுத்த கருமாண்டாம்பாளையத்தில், மோளகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ராஜேஷ் என்பவரது காரை சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்களின்றி அவர் கொண்டு சென்ற ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர் தொகுதிகளிலும் நேற்று உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.15 லட்சத்து 39 ஆயிரத்து 3300 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 97 வழக்குகளில் தொடர்புடைய ஒரு கோடியே 92 லட்சத்து 97 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.ஒரு கோடியே 31 லட்சத்து 12 ஆயிரத்து 600 ரூபாய் உரிய ஆவணங்களைக் காட்டியதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மொடக்குறிச்சி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாகவும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணிக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோட்ட கலால் அலுவலர் குமரேசன், கோபி கோட்ட கலால் அலுவலர் ஷீலா, கலால் மேற்பார்வை அலுவலர் குமார், ஈரோடு டவுன் டிஎஸ்பி., ராஜு, மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்ட அதிகாரிகள் டாஸ்மாக் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொடக்குறிச்சி டாஸ்மாக் கடையில் எத்தனை மது பாட்டில்கள் உள்ளது, தற்போது எத்தனை மது பாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டது. மேலும், விற்பனையான மது பாட்டில்களில் அதற்குண்டான தொகை உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து அவல்பூந்துறையில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை யிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்