பரமத்தியில் கோயில் காவலரை தாக்கி - நகை திருடிய வழக்கில் 3 பேருக்கு 6 ஆண்டு சிறை :

By செய்திப்பிரிவு

பரமத்தி வேலுார் அடுத்த கீரம்பூரில் உள்ள கோயில் ஒன்றில் கடந்த மாதம் 26-ம் தேதி 3 பேர் தங்கத் தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவைகளை பங்கு பிரித்து கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த கிராம மக்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கிராம மக்களை அவர்கள் மிரட்டி எச்சரித்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி வேலூர் போலீஸார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முறுக்கு (எ) முருகசுந்தரம் (22), சுரேந்திரன் (எ) ராஜூ (24), முத்து (எ) கருப்பசாமி (25) என்பதும், பரமத்தியில் உள்ள சேத்துப்பட்டு மாரியம்மன் கோயிலில் இரவுக் காவலரை தாக்கி, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவற்றை திருடி வந்து பங்கு பிரித்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் 3 பேரும் நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு பரமத்தி வேலுார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று 3 பேருக்கும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்