தேர்தல் வந்துவிட்டாலே கூடவே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வஞ்சனையின்றி அள்ளி வீசுவார்கள். முக்கிய அரசியல் கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் சுயேச்சை வேட்பாளர்களும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பார்கள். சமீபத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும், நீச்சல் குளம் வசதியுடன் 3 மாடி வீடு கட்டித் தரப்படும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து குடும்பங்களுக்கும் 20 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும், ஹெலிகாப்டர் வழங்கப்படும் என்று, வாக்குறுதிகளை அள்ளி வீசியது சமூக வலைதளங்களில் பரவி நகைப்பை ஏற்படுத்தியது.
வெற்றி பெறும் பல வேட்பாளர் கள் பதவிக்கு வந்ததும் தேர்த லில் அளித்த வாக்குறுதி களை மறந்து விடுவதும், அடுத்த தேர்தலில் மீண்டும் பழைய வாக்குறுதிகளை தூசு தட்டி எடுத்து, புதிதாக கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தென்காசி மாவட்ட மக்களும் பழைய வாக்குறுதிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் கேட்டுக்கேட்டு சோர்ந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “தென்காசியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தென்காசி, சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வெளி வட்டச் சாலை அமைக்கப்படும். தென்காசி- திருநெல்வேலி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்படும். தென்காசி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும்.
காய்கறிகள், எலுமிச்சை உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப் படும். இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தொழிற் சாலை அமைக்கப்படும். வாசுதேவ நல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் தென்காசி மாவட்டத்தில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தென்காசி மாவட்ட தேர்தல் களத்தில் தேர்தலுக்குத் தேர்தல் எதிரொலிக்கின்றன. இந்த வாக்குறுதிகள் இந்த தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் மறக்காமல் இடம்பிடித்துவிட்டன.
நிறைவேற்ற வேண்டும்
குற்றாலம் மலைக்கு மேல் தெற்கு மலையில் அணை கட்டி ஆண்டு முழுவதும் குற்றாலம் அருவியில் தண்ணீர் விழ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மறந்துவிட்டனர். ஆனால், இதை வாக்காளர்கள் மறக்கவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இந்த தேர்தலிலாவது வெற்றிபெறும் வேட்பாளர்கள் தாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago