வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் நேற்று ஒரே நாளில் 7.24 லட்சம் பணமும், 6 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 5 நாட்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணிகளும் தொகுதி வாரியாக தொடங்கப்படவுள்ளன. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங் களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளன. இந்நிலையில், வாக் காளர்களை கவர வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் சார்பில் பணம் பட்டுவாடா செய்யும் முயற்சிகளும் மறைமுக நடந்து வருகிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண் காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதிகளில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருவதை போல நகரின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாகன சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சத்துவாச்சாரியைச் சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளர் நமன் என்பவர் தனது காரில் அவ் வழியாக வந்தார். அந்த காரை நிறுத்தி சோதனை யிட்டபோது, அதில் 60 ஆயிரத்து 900 ரூபாய் இருப்பதும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாதது தெரியவந்தது. உடனே, அந்த பணத்த தேர்தல் நிலை கண் காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல, காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிறிஸ்ட்டியான் பேட்டையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு ஜெயப்பிரகாஷ் தலைமையில் நேற்று காலை வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவ் வழியாக சத்துவாச்சாரியைச் சேர்ந்த சையது பாஷரத் அசேன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
அந்த வாகனத்தை சோதனை யிட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணிய கோட்டியிடம் ஒப்படைத்தனர்.
மேலும், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசி தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்பாடி பாரதி நகரில் பிரியாணி கடை நடத்தி வரும் இக்பால் என்பவர் தனது காரில் அவ் வழியாக வந்தார்.
காரை நிறுத்தி நிலை கண் காணிப்பு குழுவினர் சோதனை நடத்தியபோது, அந்த காரில் 62 ஆயிரத்து 900 ரூபாய் இருப்பது தெரியவந்தது.அந்த பணத்துக்கான ஆவணம் அவரிடம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வெளதிகாமணி பெண்டா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது காரில் அங்கு வந்தார். அந்த காரை சோதனையிட்டபோது, அதில் 6 லட்சம் பணம், 6 பவுன் எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.
நகை மற்றும் பணத்துக்கான ஆவணங்கள் சீனிவாசனிடம் இல்லாததால், அந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago