அதிக வட்டி தருவதாகக் கூறி, அரசு ஊழியரிடம் ரூ.2.55 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவரை ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் புளியம்பட்டி, மீனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம், பண்ணாரி அம்மன் நகரில் கே.எம் .ஜி டிரேடிங் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 5 சதவீதம் வட்டி கொடுப்பதாகவும், முதலீடு ஒப்பந்தம் நிறைவு பெற்றதும் முதலீட்டு பணத்தை முழுவதும் கொடுப்பதாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த கவர்ச்சி திட்டத்தை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு லேப் டெக்னீசியனாகப் பணிபுரியும் ஜெய்கணேஷ் (38), ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கோவிந்தராஜ் நடத்தி வரும் கே.எம்.ஜி டிரேடிங் அகாடமியில், ரூ.2 கோடியே 55 லட்சம் முதலீடு செய்ததாகவும், அதற்கான வட்டியும் முதலீடும் திருப்பி கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கோவிந்தராஜ் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான கோவிந்தராஜன் தலைமறைவானார். இவர் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகே இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜேஷ் கூறும்போது, கே.எம்.ஜி. நிறுவனத்தின் மீது வந்த புகாரைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான கோவிந்தராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் பலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 0424 - 2256700, 9498178566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago