நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பார்வையிட்டு கண்காணிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் சசிதாமண்டல் (ராசிபுரம், சேந்தமங்கலம்), ஷோபா (நாமக்கல்), நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா (பரமத்திவேலூர்), ஏ.பி.கார் (திருச்செங்கோடு, குமாரபாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசியதாவது:
நுண்பார்வையாளர்கள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்தல், வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பார்வையிடல், வாக்குப்பதிவின் ரகசியம் காக்கப்படுகிறதா, வேட்பாளர்களின் முகவர்கள் செயல்பாடு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா, வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்கள் மட்டும் வருகின்றனரா போன்ற விவரங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
வாக்குப்பதிவின் இயல்பான நிலைக்கு மாறாக ஏதேனும் மாறுதல் தென்பட்டால் அதுகுறித்து உடனடியாக தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். நுண்பார்வையாளர்கள் தங்களது அறிக்கையை வாக்குப்பதிவு முடிந்த பிறகு பொது பார்வையாளரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி மற்றும் நுண்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago