ஜெயலிதாவின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும், என நாமக்கல்லில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல் பூங்கா சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளரை 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.அதுபோல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி என்ன சொன்னாலும் முதல்வர் பழனிசாமி கேட்பார். அவருக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. வர்தா, ஒக்கி புயல் பாதிப்பின் போது ரூ.40,000 கோடி மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. ஆனால் கொடுத்தது ரூ.1000 கோடி. ஜிஎஸ்டி மூலம் ரூ.15,000 கோடி வரியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால், நிதி ஆதாரம் இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி தனியாக செல்வதற்காக 2 சொகுசு விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.8,000 கோடி.
அதிமுகவிற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு விழும். திமுக ஆட்சியின் போது நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. அதேபோல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்திலும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதியளிக்கவில்லை. அதற்கு பின்னர் அதிமுக அரசு நீட் தேர்வைகொண்டு வந்தது. இதனால் பெரம்பலூர் மாணவி அனிதா உள்பட கடந்த மூன்று ஆண்டுகளில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள் ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
ஜெயலலிதாவை 80 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் வைத்திருந்தனர். ஆனால் அவரது மரணம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஜெயலலிதாவின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ராசிபுரம், சேந்தமங்கலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago