தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் - தென்மாவட்டங்களுக்கு வரும் முக்கிய கட்சி தலைவர்கள் :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிகட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் வரவுள்ளதால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற ஒருவாரமே இருக்கும் நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சில சுயேச்சை வேட்பாளர்களும் காலையில் தொடங்கி இரவு வரையிலும் வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரவு திரட்டுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு கேட்டு பல்வேறு தலைவர்களும் கடந்தசில வாரங்களாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிகட்டத்தில் தென்மாவட்டங்களுக்கு முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் மேலும் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தென்மாவட்டங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறுகட்டங்களாக பிரச்சாரம் செய்துள்ளநிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திலும் பிரச்சாரம் செய்கிறார். மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தென்மாவட்டங்களில் இன்னமும் பிரச்சாரம் மேற்கொள்ளாத கமல்ஹாசன் நாளை (31-ம் தேதி) காலை 11 மணிக்கு தூத்துக்குடி, நண்பகல் 12 மணிக்கு திருநெல்வேலி, மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்கிறார். இதுபோல் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் வரும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். வரும் 1-ம் தேதி கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மேலப்பாளையம் ஆகிய இடங்களிலும், 2-ம் தேதி நாங்குநேரி, களக்காடு, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வைகுண்டம், தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் டிடிவி தினகரன் பேசுகிறார். அடுத்த நாள் தான்போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

வரும் 2-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாசுதேவநல்லூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

வரும் 3-ம் தேதி திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், விளவங்கோட்டில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவும் பிரச்சாரம் செய்யவுள்ளனர். கன்னியாகுமரியில் அன்று பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தெரிகிறது. இதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் தென்மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சில சுயேச்சை வேட்பாளர்களும் காலையில் தொடங்கி இரவு வரையிலும் வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்