திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக - வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சீட்டு பொருத்தம் : உதயசூரியன் சின்னம் தெளிவாக இல்லை என குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,465 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொகுதி வாரியாக வேட்பாளர் சீட்டு பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

தி.மலை மாவட்டத்தில் உள்ள செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 382 வாக்குச்சாவடிகள், திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 400 வாக்குச் சாவடிகள், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 345 வாக்குச்சாவடிகள், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 338 வாக்குச்சாவடிகள், போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 333 வாக்குச்சாவடிகள், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 386 வாக்குச்சாவடிகள், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 371 வாக்குச்சாவடிகள், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 330 வாக்குச்சாவடிகள் என 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,885 வாக்குச்சாவடிகள் உள்ளன.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக 20 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 31 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கிடங்கில் இருந்து, அந்தந்த தொகுதிகளின் தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர், அவை அனைத் தும், பாதுகாப்பாக பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. 3,465 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 3,465 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 3,783 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் என மொத்தம் 10,713 இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்கிடையில், வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்ததும், இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 22-ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இதையடுத்து, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர் பட்டியல் அச்சிடப்பட்டது. தேசிய கட்சி, அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைகள் என அகர வரிசைப்படுத்தி வேட்பாளர் சீட்டு அச்சிடப்பட்டது. அதனை, பொருத்தும் பணி தி.மலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

தி.மலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் சீட்டுபொருத்தும் பணி, திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்க இருந்தது. அப்போது, வேட்பாளர் சீட்டில் திமுகவின் உதயசூரியன் சின்னம், மக்களின் பார்வையில் படும்படி தெளிவாக அச்சிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மற்ற வேட்பாளர்களின் சின்னங்கள் பளிச்சென இருப்பதாகவும், உதயசூரியன் சின்னம் தெளிவாக இல்லை என திமுக தரப்பில் கூறப்பட்டது.

அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ளும் விவிபாட் இயந்திரத்தில் இடம்பெற்றுள்ள உதயசூரியன் சின்னமும் தெளிவாக இல்லை என்றனர். இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திமுகவினரின் குற்றச் சாட்டுக்கு விளக்கமளித்தார். மேலும் அவரது அறிவுரையின் பேரில், விவிபாட் இயந்திரத்தில் தெரியும் வகையில் உதய சூரியன்சின்னத்தில் மாற்றம் செய்யப் பட்டது. அதன் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

இதேபோல், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது. அந்த பணி நிறைவு பெற்றதும், மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக உள்ளதா? என அரசியல் கட்சியினர் முன்னிலையில் பரி சோதனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்