சத்துணவு உள்ளிட்ட திட்டங் களுக்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணா மலையில் நெல் தூற்றும் நூதன போராட்டத்தில் நேற்று விவசாயிகள் ஈடுபட்டனர்.
உழவர் பேரவை சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “தமிழக அரசு சத்துணவு, ரேஷன் கடை, அன்னதானம் திட்டம், அரசு மருத்துவ மனைகளில் உணவு வழங்க, மாதந்தோறும் 150 டன் நெல் தேவைப்படுகிறது. அதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்கிறது. எஞ்சிய, 120 டன் நெல்லை, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து கொள்முதல் செய் கிறது. அவை அனைத்தையும் தமிழக விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், ரேஷன் கடைகளில் மராட்டிய மைசூர் பருப்பு வழங்குவதை நிறுத்திவிட்டு பச்சை பயறு, துவரம் பருப்பை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கெனவே ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,958 வழங்கப்படுகிறது. இப்போது, அரசியல் கட்சியினர் ரூ.2,200 வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருமா? என தெரியவில்லை. அதற்கு பதிலாக, சமூக நல திட்டங்களுக்கு தேவையான நெல் உள்ளிட்ட தானியங்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தால் பலனாக இருக்கும்.
தமிழகத்தில் கரும்பு விவசாயி களுக்கு ரூ.2,380 கோடி நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது. இந்நிலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங் கப்படும் என்கின்றனர். இதுவும் விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பு. ரங்கராஜன் கமிஷன் பரிந்துரைப்படி உப பொருள் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால், சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும் மொலாசஸ் முழுமையாக சாராயம் தயாரிக்க கொண்டு செல்கின்றனர். எத்தனால் தயாரிக்கவில்லை. எத்தனால் தயாரித்தால்தான், ரங்க ராஜன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற முடியும்.
தமிழக நிதி நிலையில் 66 சதவீதம், நிர்வாக செலவுக்கு செல்கிறது. மீதமுள்ள 34 சதவீதத் துடன், வெளியில் இருந்து 11 சதவீதம் கடன் வாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு புதிய அறிவிப்புகளை அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நிர்வாக செலவுக்கு 85 சதவீத நிதி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். மீதமுள்ள 15 சதவீதத்துடன் கூடுதலாக 34 சதவீத நிதியை கடனாக பெற்றா தால்தான் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியும். இதனால் கடன் சுமை அதிகரிக்கும். எனவே, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, அதன்மூலம் அரசின் திட்டங் களுக்கு பயன்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.
பின்னர் நெல், மணிலா மற்றும் கொப்பரை தோங்காயை தூற்றி நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள், நெல்லை தூற்றும் பறக்கும் பதர்களாக பறந்துவிடும் என விளக்கமளித்தனர். இதில், விவசாயிகள் சம்பத், சுதாகர் உட்பட பலர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago