மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளைப் போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென அம்மாநில பட்ஜெட்டில் ரூ 9000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் பாலைவனமாகும் என்று கூறி தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகம் நுழைவோம், மேகேதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்துவோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கர்நாடக எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி விவசாய சங்க அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நேற்று முன் தினம் தங்கி இருந்தனர். அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணி அளவில், பி.ஆர் .பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சத்தியமங்கலம் திப்பு சுல்தான் ரோடு வழியாக கோம்பு பாலம் வரை நடந்து சென்றனர். அங்கிருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸார் கைதுசெய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago