வீட்டில் இருந்தே தபால் வாக்குகளைப் பதிவு செய்த முதியோர் : எளிமையாக இருந்ததாக தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நேற்று தபால் வாக்கு அளித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேரும், மாற்றுத் திறனாளிகள் 14 ஆயிரத்து 597 பேரும் உள்ளனர். இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏதுவாக 12 டி படிவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில், 80 வயதுக்கு மேற்பட்ட 4,413 வாக்காளர்களும், 1022 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,435 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வீட்டில் இருந்தே தபால் வாக்களிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட தொகுதியின் சார்பில், வாக்கு சேகரிக்கும் குழுவினர் நேரடியாக வாக்காளர்கள் வீட்டுக்கு நேற்று காலை சென்றனர். தேர்தல் அலுவலர்களுடன் வேட்பாளரின் முகவர்களும் உடன் இருந்தனர். வாக்காளர் வீட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் 'ப' வடிவ அட்டைப் பெட்டியை வைத்து, குறிப்பிட்ட வாக்காளருக்கு ஓட்டு போடும் சீல் கட்டையை வழங்கி, அதை மடித்து கவரில் வைத்து, சீலிடப்பட்ட பெட்டியில் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தினர். அதன்பின்னர் வாக்குப்பெட்டி பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

தபால் வாக்கு போட முடியாதவர்களுக்கு அடுத்த வாய்ப்பாக, வரும் 31-ம் தேதி (புதன்கிழமை) மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வாக்கு சேகரிக்கும் குழுவினர் வருவார்கள் அப்போது அவர்கள் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிமையாக வீட்டில் இருந்தவாறே வாக்குப்பதிவு செய்யும் வாய்ப்பை அளித்தமைக்காக தேர்தல் ஆணையத்திற்கு மூத்த வாக்காளர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்