மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி தி.மலை அடுத்த அபயமண்டபம் அருகே கிரிவலப் பாதையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். போளூர் ஒன்றியம் சார்பில் வாழை பழம் மற்றும் வாழை நார் மூலம் சாவிக் கொத்து, பெரணமல்லூர் ஒன்றியம் சார்பில் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் ஆகியவற்றை கொண்டு இந்திய வரைபடம், வந்தவாசி ஒன்றியம் மகளிர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்த அப்பளம் மற்றும் கீழ் பென்னாத்தூர் ஒன்றியம் சார்பில் பாய்கள், கலசப்பாக்கம் ஒன்றியம் சார்பில் கரும்பு மற்றும் எலுமிச்சை பழம் மூலம் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் கோலங்கள் வரையப்பட்டிருந்தன.
மேலும், தண்டராம்பட்டு ஒன்றியம் சார்பில் காய்கறிகள் மூலமாகவும், செங்கம் ஒன்றியம் சார்பில் பாசிமணிகள் மூலமாகவும், புதுப்பாளையம் ஒன்றியம் மூலம் மிளகாய் மற்றும் உப்பு மூலமாகவும், தெள்ளார் ஒன்றியம் சார்பில் செங்கல் மற்றும் அடுப்பு கரிகள் மூலமாகவும், ஜவ்வாது மலை ஒன்றியம் சார்பில் கடுக்காய், சாமைகள் மூலமாகவும் நல்லதொரு "ஜனநாயகம் உருவாக்குவோம்" போன்ற வடிவங்களில் விழிப்புணர்வு காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதேபோல், அனக்காவூர் ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி மைய எண்கள், ஆரணி ஒன்றியம் சார்பில் மஞ்சள், மிளகாய், நவதானியங்கள் மூலம் ஒரு விரல் முத்திரை வடிவம், செய்யாறு ஒன்றியம் சார்பில் நாமக்கட்டிகளை கொண்டும், திருவண்ணாமலை நகராட்சி மூலம் விழிப்புணர்வு வாசகங்கள், சேத்துப்பட்டு ஒன்றியம் சார்பில் மலர்களை கொண்டு வாக்காளர் முத்திரையிட்ட வண்ணக்கோலம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சார்பில் உளுந்து மூலம் தேர்தல் உதவி எண் 1950 உள்ளிட்ட இணையதள விழிப்புணர்வு சேவைகள் எடுத் துரைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் 234 தொகுதி களை வாசித்து காண்பித்த தனியார் பள்ளி மாணவி சாத்விகாவை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். முன்னதாக, கடந்த தேர்தலில் குறைந்த அளவு வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தும் தபால் அட்டையை ஆட்சியர் வெளியிட்டார்.
இதில், மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, தலைமை தபால் அலுவலக கண்காணிப்பாளர் அமுதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago