வேலூர் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 8 நாட்களில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் வாக் காளர்களை கவர பணம், பரிசுப் பொருட்களின் நடமாட்டத்தை பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும்காவல் துறையினர் தங்களது கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட எல்லைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிமாநிலம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை முறையாக நடை பெறுகிறதா? என்பதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் காட்பாடி அடுத்த கிறிஸ்ட்டியான்பேட்டை, கல்புதூர், கரசமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கார், லாரி, ஆம்னி பேருந்து, கன்டெய்னர் லாரிகளில் பணம், பரிசுபொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் தேதி நெருங்கி வருவதால் 24 மணி நேரமும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புகளை பலப்படுத்த வேண்டும் என தேர்தல் பறக்கும் படையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொட்டாளம் வன சோதனைச்சாவடியில் ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மலைப்பகுதிகளில் இருந்து வந்த இரு சக்கர வாகனம், ஆட்டோ, சரக்கு வாகனம், கார் உள்ளிட்டவைகளில் மதுபானம், சாராயம் கடத்தப்படுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago