திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலியில் பகல்நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன் ஹீட்டை தொடும் அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பகலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. வள்ளியூர், நாங்குநேரி வட்டாரங்களில் சற்று பலத்த மழை பெய்தது.
பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலியில் பெய்த மழையால் தாழ்வான இடங்களி லும், சாலையோரங் களிலும் தண்ணீர் தேங்கியது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாப நாசம் அணை நீர்மட்டம் 111.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 179 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 604 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 445 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மற்ற அணைகளின் நீர் இருப்பு (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்): சேர்வலாறு- 120.60 அடி (156), வடக்கு பச்சையாறு- 44.30 (50), நம்பியாறு- 13.05 (22.96), கொடுமுடியாறு- 9.50 (52.50).
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக் கும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணையில் 7 மி.மீ., கருப்பாநதி அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் தென்காசி, சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது. மாலையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இடைகால் - ஆலங்குளம் சாலையில் 4 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரியில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 7.2 மிமீ மழை பெய்தது.ஆனைகிடங்கில் 6 மிமீ, குருந்தன்கோட்டில் 5, நாகர் கோவில், பேச்சிப்பாறை, முக்கடல் அணை ஆகிய இடங்களில் தலா 2 மிமீ மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் அணைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. அணைக்கு 109 கனஅடி தண்ணீர் வருகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 52.32 அடியாக இருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 10.3 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 7.42 அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago