கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக்கோரி - பவானி, அயோத்தியாப்பட்டணத்தில் பக்தி பாடல்களை பாடி விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக்கோரி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக பக்தி பாடல்களை பாடி விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்கக் கோரி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 11 பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தி பாடல்கள் பாடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில், ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று மாலை பக்தி பாடல்கள் பாடி, தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள், ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற பதாகையை ஏந்தி பிரச்சாரம் செய்தனர்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 44 ஆயிரம் கோயில்களில், 12 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடப்பது இல்லை. பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் பொறுப்பற்ற நிர்வாகத்தின் விளைவாக, 34 ஆயிரம் கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றன. 37 ஆயிரம் கோயில்களில் பூஜை செய்வது, பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்து பணிகளுக்கும் ஒரு கோயிலுக்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார். 1200 தெய்வ திருமூர்த்திகள் திருடு போயுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை அறநிலையத் துறையே சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 முக்கிய கோயில்களைத் தவிர்த்து மற்ற கோயில்கள் இல்லாமல் அழிந்து போகும். இந்த அவல நிலைக்கு தீர்வு காணும் விதமாக, கோயில்களை அரசின் பிடியில் இருந்து மீட்டு, இந்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு ஆதரவு திரட்டவும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபோல் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோயிலிலும் ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று மாலை பக்தி பாடல்கள் பாடி, தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்