மதுரையில் கடந்த முறை எம்பியாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். ஆனால், அவருக்கு கடந்த மக்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து, திமுக எம்எல்ஏ மூர்த்தி களம் காண்கிறார். கடந்த மக்களவைத்தேர்தலில் சு.வெங்கடேசன் எம்பி வெற்றிக்கு மூர்த்தியின் பிரச்சார வியூகம்தான் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
மூர்த்தி, தற்போது பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம், கோபாலகிருஷ்ணன் எம்பியாக இருந்தபோது உங்கள் வீட்டு காது குத்து, கல்யாணத்துக்கு வந்தாரா? அவரை இந்தத் தொகுதியில் என்றாவது பார்த்தது உண்டா?, எனக் கேள்வி கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஊமச்சிகுளம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தபோது பேசிய உருக்கமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், ‘‘கல்யாணத்துக்கும், காது குத்துக்கும் வரவில்லை என்பதை குற்றச்சாட்டாகச் சொன்னால் அவர் காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார் என்றுதான் அர்த்தம்.
எம்பி சு. வெங்கடேசன் 2 ஆண்டுகளில் மதுரைக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்? எத்தனை நாள் உங்களை சந்தித்துள்ளார்.? பேஸ் புக், வாட்ஸ் ஆப்-ல் வந்தால் போதுமா?
ரூ.2000 கோடி செலவிலான நத்தம் பறக்கும் மேம்பாலம் திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் பேசி நான் கொண்டு வந்தேன். இதுபோல், ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘எய்ம்ஸ்’ என்னோட முயற்சியில் வந்தது. கூகுளில் எனது பெயரைத் தேடினால் மதுரைக்கு என்னென்ன செய்தேன் என அதில் தகவல் வரும். மக்களை நெஞ்சுரத்தோடு சந்திக்கிறேன். என்னை எம்எல்ஏ ஆக்கி பாருங்கள். நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை.
பதவியை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், அரசியலுக்கு வந்த தொழில் அதிபர் இல்லை. விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். இன்றும் விவசாயம் செய்கிறேன்.
கல்யாணத்துக்கும், காது குத்துக்கும் வரவில்லை என்று நினைக்காதீர்கள். நன்றி உள்ளவனாக இருப்பதைப் பாருங்கள், ’’ என்றார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘மக்களவையில் 87 சதவீதம் வருகைப் பதிவேடு உள்ளது. 28 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். 473 கேள்விகளை கேட்டுள்ளேன். தொகுதி சம்பந்தப்பட்ட 165 விஷயங்களை பற்றிப் பேசி உள்ளேன். தற்போதைய எம்.பி.யை போல் ‘பேஸ்புக்’கில் அரசியல் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago